Thursday, April 25, 2013

அபிராமி அம்மை பதிகம் --- I



அபிராமி  பட்டர்  அருளிய  திருக்கடவூர்  அபிராமி  அம்மை பதிகம் .

காப்பு


தூயதமிழ்ப்  பாமாலை சூட்டுதற்கு மும்மதநால்
வாயைக்  கரன்றாள்  வழுத்துவாம்  - நேயர்நிதம் 
எண்ணும்  புகழ்க்கடவூர்  எங்கள்  அபிராமவல்லி
நண்ணும்  பொற்பாதத்தில்  நன்கு .


நூல்

ஆசிரிய  விருத்தம்

கலையாத  கல்வியும்  குறையாத  வயதும் ஓர் 
    கபடு  வாராத  நட்பும் 
கன்றாத  வளமையும்  குன்றாத  இளமையும் 
     கழுபிணி யிலாத  உடலும் 
சலியாத  மனமும்  அன்பகலாத  மனைவியும் 
      தவறாத  சந்தா  னமும் 
தாழாத  கீர்த்தியும்  மாறாத   வார்த்தையும் 
        தடைகள்  வாராத   கொடையும் 
தொலையாத  நிதியமும்  கோணாத  கோலும்  ஒரு 
         துன்ப   மில்லாத   வாழ்வும் 
துய்ய  நின்  பாதத்தில்  அன்பும்  உதவிப்பெரிய
       தொண்டரொடு  கூட்டு  கண்டாய் !
அலையாழி  அறிதுயிலும் மாயனது  தங்கையே !
         ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
        அருள்வாமி !   அபிராமியே !                                    {1}




காரளக   பந்தியும்   பந்தியின்  அலங்கலும்
           கரிய  புருவச்   சிலைகளும்
கர்ண  குண்டலமும்  மதிமுகமண்டலம்  நுதற் 
           கஸ்தூரிப்  பொட்டும்  இட்டுக் 
கூரணிந்   திடு  விழியும்  அமுதமொழியும்  சிறிய 
         கொவ்வையின்  கனி  அதரமும் 
குமிழனைய  நாசியும் குந்த  நிகர்  தந்தமும் 
          கோடு   சோடான   களமும் 
வாரணிந்   திருமாந்த   வனமுலையும்  மேகலையும் 
           மணிநூ   புரப்பாதமும் 
வந்தெனது  முன்னின்று  மந்தகா  சமுமாக 
           வல்வினையை   மாற்றுவாயே  !
ஆரமணி  வானில்  உரை  தாரகைகள்  போல  நிறை 
          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
         அருள்வாமி !   அபிராமியே !                                {2} 




மகரவார்    குழல்மேல்  அடர்ந்து  குமிழ்   மீதினில் 
        மறைந்து  வாளைத்  துறந்து 
மைக்கயலை  வேண்டிநின்  செங்கமல  விழியருள் 
         வரம்பெற்ற   பேர்களன்றோ?
செகமுழுதும்  ஒற்றைத்  தனிக்குடை  கவித்து  மேற் 
          சிங்கா   தனத்தில்    உற்றுச் 
செங்கோலும்   மனுநீதி  முறைமையும்  பெற்றுமிகு 
           திகிரியுல    காண்டு  பின்பு 
புகர்முகத்(து)   ஐராவதப்   பாக   ராகிநிறை 
            புத்தேளிர்   வந்து போற்றப் 
போகதே    வேந்திரன்   எனப்புகழ்    விண்ணில் 
             புலோமிசை  யொடும்   சுகிப்பர்!
அகரமுத    லாகிவளர்   ஆனந்த   ரூபியே !
            ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                             {3}




மறிகடல்கள்  ஏழையும்  திகிரி  இரு   நான்கையும் 
             மாக்ரதி    கரியெட்டையும் 
மாநாகம்  ஆனதையும்  மாமேரு  என்பதையும் 
             மாகூர்மம்   ஆனதையும்   ஓர் 
பொறியரவு  தாங்கிவரும்  புவனம்  ஈரேழையும் 
             புத்தேளிர்   கூட்டத்தையும் 
பூமகளையும்  திகிரி  மாயவனையும்   அரையில் 
             புலியாடை  உடையா   னையும் 
முறைமுறைகளாய் ஈன்ற  முதியவர்களாய்ப்  பழைமை 
            முறைகள்  தெரியாத  நின்னை 
மூவுலகில்  உள்ளவர்கள்  வாளையென்றறியாமல் 
          மொழிகின்ற   தேது   சொல்வாய்?
அறிவுநிறை  விழுமியர்தம்  ஆனந்த   வாரியே!
          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                                {4}



வாடாமல்   உயிரெனும்   பயிர்தழைத்   தோங்கிவர 
          அருள்மழை   பொழிந்தும்   இன்ப 
வாரிதியிலே   நின்னதன்   பெனும்   சிறகால் 
          வருந்தாம  லே   யனைத்துக் 
கோடாமல்  வளரும்  சிற்றெலும்பு  முதல்  குஞ்சரக் 
          கூட்ட    முதலான   சீவ 
கோடிகள்   தமக்குப்  புசிக்கும்  புசிப்பினைக் 
          குறையாமலே    கொடுத்து 
நீடாழி   உலகங்கள்  யாவையும்  நேயமாய்
           நின்னுதர    பந்தி  பூக்கும் 
நின்மலி    அகிலங்களுக்கன்னை  என்றோதும் 
           நீலியென்று  ஓதுவாரோ? 
ஆடாய  நான்  மறையின்   வேள்வியால்  ஓங்குபுகழ் 
         ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                                     {5}


பல்குஞ்   சரற்தொட்  டெறும்புகடை  யானதொரு 
       பல்லுயிர்க்   குங்கல்   லிடைப் 
பட்டதே  ரைக்கும்அன்று  உற்பவித்திடுக்  கருப் 
        பையுறு   சீவனுக்கும் 
மல்குஞ்   சராசரப்  பொருளுக்கும்  இமையாத 
         வானவர்     குழாத்தினுக்கும் 
மற்றுமொரு  மூவர்க்கும்  யாவர்க்கும்  அவரவர் 
          மனச்   சலிப்பில்லாமலே 
நல்கும்   தொழிற்பெருமை   உண்டாயிருந்து  மிகு 
          நவநிதி    உனக்கிருந்தும் 
நானொருவன்  வறுமையில்  சிறியனானால்  அந் 
           நகைப்  புனக்கே  யல்லவோ?
அல்கலந்து   உம்பர்  நாடு  அளவெடுக்குஞ்  சோலை 

             ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                                {6}


நீடு   உலகங்களுக்கு   ஆதாரமாய்    நின்று 
          நித்தமாய்    முத்தி     வடிவாய் 
நியமமுடன்   முப்பத்திரண்டறம்    வளர்க்கின்ற 
          நீ  மனைவியாய்   இருந்தும் 
வீடு  வீடுகள்  தோறும்ஓடிப்புகுந்து   கால் 
         வேசற்று   இலச்சையும்   போய் 
வெண்துகில்  அரைக்கணிய  விதியற்று  நிர்வாண 
         வேடமும்  கொண்டு  கைக்கோர் 
ஓடேந்தி  நாடெங்கும்  உள்ளந்  தளர்ந்துநின்று 
         உன்மத்தனாகி    அம்மா !
உன்கணவன்  எங்கெங்கும்    ஐயம்புகுந்தேங்கி 
         உழல்கின்ற   தேது   சொல்வாய் ;
ஆடுகொடி   மாடமிசை  மாதர்  விளையாடி  வரும் 

        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
        அருள்வாமி !   அபிராமியே !                                {7}


ஞானந்  தழைத்துன்   சொரூபத்தை   அறிகின்ற 
           நல்லோர்  இடத்தினிற்   போய் 
நடுவினில்  இருந்து  வந்தடிமையும்   பூண்டவர் 
           நவிற்றும்  உபதேசம்  உட்கொண்டு 
ஈனந்தனைத்தள்ளி   எனது  நானெனும்  மானம் 
           இல்லாமலே  துரத்தி 
இந்திரிய   வாயில்களை இறுகப்புதைந்து  நெஞ்சு 
           இருளற   விளக்கேற்றிய 
ஆனந்தமான   விழி  அன்னமே ! உன்னை  என் 
           அகத்   தாமரைப்   போதிலே 
வைத்துவே   றேகவலை   யற்றுமே   லுற்றபர 
            வசமாகி    அழியாத   தோர் 
ஆனந்த  வாரிதியில்  ஆழ்கின்ற  தென்று  காண்?

           ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                             {8}


சலதியுல  கத்திற்  சராசரங்  களை   யீன்ற 
           தாயாகினால்   எனக்குத் 
தாயல்லவோ?  யான்  உன்   மைந்தனன்றோ?  எனது 
           சஞ்சலம்  தீர்த்து நின்றன் 
முலை  சுரந்தொழுகு  பாலூட்டி  என்  முகத்தை  உன் 
           முன்தானையால்     துடைத்து 
மொழிகின்ற  மழலைக்குகந்து  கொண்டிளநிலா 
            முறுவல்   இன்புற்றருகில்  யான் 
குலவி  விளையாடல்  கொண்டருள்  மழை  பொழிந்து  அங்கை 
            கொட்டிவா   என்றழைத்துக் 
குஞ்சரமுகன்   கந்தனுக்  கிளையன்  என்றெனைக் 
             கூறினால்   ஈனம்   உண்டோ?
அலைகடலிலே   தோன்றும்  ஆறாத  அமுதமே !

            ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                               {9}



கைப்போது   கொண்டுன்  பதப்போது  தன்னில் 
            கணப்போதும்   அர்ச்சிக்   கிலேன்:
கண்போதினால்  உன்  முகப்போது  தன்னையான் 
            கண்டு  தரிசனை  புரிகிலேன்:
முப்போதில்  ஒரு  போதும்  என்மனப்  போதிலே 
            முன்னி  உன்  ஆலயத்தின் 
முன்போதுவார்  தமது  பின்போத  நினைகிலேன் 
            மோசமே   போய்   உழன்றேன் 
மைப்போத  கத்திற்கு  நிகரெனப்  போதெரு 
            மைக்கடா   மீதேறியே 
மாகோர   காலன்  வரும்போது  தமியனேன் 
           மனங்   கலங்கித்  தியங்கும் 
அப்போது  வந்துன்  அருட்போது  தந்தருள் 

          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                                  {10}


மிகையும்  துரத்த  வெம்பிணியும்  துரத்த 
          வெகுளியானதும்   துரத்த 
மிடியும்  துரத்த  நரைதிரையும்   துரத்தமிகு 
          வேதனைகளும்   துரத்த 
பகையும்   துரத்த  வஞ்சனையும்   துரத்தப் 
           பசியென்பதும்   துரத்தப் 
பாவம்  துரத்த  பதி  மோகம்  துரத்தப் 
          பல  காரியமும்  துரத்த 
நகையும்  துரத்த  ஊழ்  வினையும்  துரத்த 
         நாளும்  துரத்த   வெகுவாய் 
நாவறண்டோடி  கால்தளர்ந்திடும்  என்னை 
         நமனும்   துரத்தவானே?
அகில  உலகங்கட்கும்  ஆதாரதெய்வமே!

        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
       அருள்வாமி !   அபிராமியே !                                   {11}          
                      


                  
                      
         
          




       

  
     


                


No comments:

Post a Comment